உண்மையை உணர்த்திய அகிலன்

 க.அபிராமி

ஆசிரியர் அகிலன் பற்றிய கட்டுரை



‘ நான் எழுதிய முதற் கதையும் சரி , இனி நான் எழுதப்போகும் கடைசிக்  கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக்  கொண்டவைகளே.கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே. ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம்,மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்-இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்.’ – அகிலன்


செல்வமும் செழிப்பும் மிக்க வகையில் தந்தையின் செல்லப்  பிள்ளையாக வளர்ந்தார் அகிலன்.ஆனால்  தனது இளம்வயதிலேயே தந்தையை இழக்க நேரிட்டது,இளமையில் வறுமை என்ற கொடுமைக்குத்  தள்ளப்பட்டார்; இருப்பினும் தாயின் கடும் உழைப்பால் தமது பள்ளிக் கல்வியைத்  தொடர்ந்தார் அகிலன்.
தனது மாணவப்பருவத்தில் – 1938  முதலே அகிலன் எழுதத் துவங்கினார்.பள்ளி இதழுக்காக, பதினாறாவது வயதில் அவர் எழுதிய  ‘அவன் ஏழை’ எனும் அவரது முதல் சிறுகதை அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கிறது.

இதை அவரே தனது ‘எழுத்தும் வாழ்க்கையும்‘ நூலில்  குறிப்பிடுகிறார் .
அகிலன், பள்ளிப் பருவத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார், அவரைச் சுற்றி நிகழ்ந்த  தேசியப்  போராட்டங்களும், காந்திஜியின் கரூர் வருகையும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் சர்தார் வல்லபாய்  படேலைச் சந்தித்ததும், அகிலனின் சுதந்திரப்  போராட்ட வேட்கையைத் தூண்டின .

நாட்டு விடுதலை ஆர்வத்தில் தமது மேற்கல்வியை உதறி விட்டு 1940 இல் வெளிவந்த இவர், தமிழகத்தின் சிறுபத்திரிக்கைகள் முதல் பிரபல இதழ்கள் வரை சிறுகதைகளை  எழுதத் துவங்கினார்.

தனிமனித உணர்வுச் சிக்கல்கள்,சமூகப்பிரச்சினைகள் என்று பற்பல  தளங்களில் சிறுகதைகள்,குறுநாவல்கள் எழுதித் தமிழ் வாசகரிடையே தனித்த அடையாளத்துடன் வரவேற்கப் பெற்றார்.

முழுநேர எழுதுப்பணிக்காகத்  தமது ரயில்வே அஞ்சலகப் பணியை 1958  இல்  விட்டு விலகி வந்தார்.

சில காலம் முழு நேர எழுத்துப் பணி என்ற இலக்கிய வாழ்வுச் சோதனையை நடத்திய பின், 1966லிருந்து  சென்னை அகில இந்திய வானொலியில் சொற்பொழிவுத் துறை அமைப்பாளராக உழைத்து 1982  இல் ஓய்வு பெற்றார்.

அகிலனின் பல  சிறுகதைகள் இந்தியாவின் பிற மாநில  மொழிகளிலும் , ஆங்கிலம்,ஜெர்மன்,போலிஷ்,செக்,ரஷ்யன்,பல்கேரியன் ,பிரெஞ்சு போன்ற பிற நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன .

அகிலனின் சிறுகதைகள் வாழ்வின் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப் பட்டவை.எளிய நடையில், வலிமையான கருத்துக்களை சுவாரசியமான தனது எழுத்து நடையால் வாசகரின் மனதில் பதிய வைப்பதே காலத்தை வென்ற படைப்பாளியான அகிலனின் தனித்துவம் .

கீழ்வரும் அவரது சிறுகதைச் சிதறல்களில் ஒலிக்கும் அகிலனின் சமுதாயப் பார்வையை அவரது குரல்வழியே கேட்போம்.


மாளிகைவாசிகளைப் பற்றி நினைத்தவுடன் ஆண் மேகத்தின் உடலெங்கும் தீப்பற்றி எரிவதுபோல் இருந்தது. அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கையும், குடியும் கூத்துக்களும், சூதுவாதுகளும் அதற்கு ஏற்கனவே தெரிந்திருந்தன. அவர்களைப் போன்ற ஒரு சிறு கும்பல் உலகில் இருப்பதால் கோடிக்கணக்கான ஏழைகள் கோவணத் துணிகூட    இல்லாமல் அநாதைகளாகத் தெருத்தெருவாய் அலைந்து திரிவதை அது பார்த்திருக்கிறது. அரை வயிற்றுக்குப் போதுமான கஞ்சி இல்லாதபோது அந்த ஏழைகள் போட்ட அழுகுரல் வானில் எழும்பி, அதன் காதுகளில் சுழன்றிருக்கிறது.” மேக சஞ்சாரம் -(1941 -1945 )


வேலைக்காரர்களைப் பத்திக் கவலைப்படாதே! உலகமே கூலிக்காரனோட குடிசயாலேதான்  நிறைஞ்சிருக்கு. ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு சோறு போட்டா, உயிர்போற மட்டும் நமக்காக உழைப்பானுங்க. நம்ப ஊரிலே இருக்கிறவன் செத்தா   அடுத்த ஊர்க்காரன் இல்லை?”

” ஆம் அவர்கள் பரம ஏழைகள் மிகவும் கேவலமான நிலையில் இருப்பதால், அவர்களும் நியாயமாக வாழவில்லை. ஒரு சாராரை அதிகப் பணம் பேயாக்குகிறது, மற்றொரு சாராரை அதிக வறுமை திருடர்களாகவும்,வஞ்சகர்களாகவும் ஆக்குகிறது.

– எல்லோருக்கும் பெய்த மழை (1947 ).


பலம் மிகுந்த நம்மைக் கட்டுப்படுத்த இன்னும் வலை அவர்களிடம் தயாராகவில்லை. அப்படியே நாம் அகப்பட்டு அவர்களிடம் சென்றால் கூட, இப்போது

நம்மைக் கண்டு அவர்கள் பயப்படத்தான் செய்வார்கள்.கரைக்குப் போன பிறகுகூட நாம் துள்ளி நீரில் விழுந்தால், அவர்களுக்குப் பிடிக்கத் துணிவு கிடையாது. ஏன் தெரியுமா? நாம் பெரிய மீன்கள்.” – பெரியமீன்-1950 .


“நீங்க என்ன சாதின்னு கேட்டேன்?”

“அதுவா? மனுஷ சாதி! போதுமா?”

“ஒன்னு – இப்போ இருக்கிற சாதி,மதம்,நிறம்,இந்தக் கட்டுப்பாடு சுத்தமாத் தளரனும். மனுஷனோட வளர்ச்சிக்கு அது தடையா இருக்கப்படாது.இப்படி இருந்தால் நாம் வாழலாம். இல்லாட்டி மிருகங்களிலும் கேவலமாய் அடித்துக்கொண்டு சாக வேண்டியதுதான்.நாளுக்கு நாள் இந்த வெறுப்பு தீ போலப் பரவுது.”    – சாதி 1949


“இருபது வருஷமாய் எல்லா ரயில்களும் தண்டவாளத்தின் மேல்தான் ஓடுகின்றன.கொஞ்சங்கூட முன்னேற்றத்தைக் காணவில்லை. புதுமை இல்லை; புரட்சி இல்லை! புரட்சிக்காரர்கள் செய்த புதுமையால் சில சமயம் ரெயில் தண்டவாளத்தை விட்டு முன்னேற்றப் பாதையில் போய்த் தலை

கவிழிந்திருக்கிறது .அவ்வளவுதான்.” – பூச்சாண்டி 1953


“எழுத்தாளர் சிரித்தார்.”வசதியுள்ள வாசகர்களுக்குப் புத்தகம் வாங்கிப் படிக்க மனம் இல்லை.வாங்கிப் படிக்க ஆசைப்படுகிறவர்களிடம் கையில் காசில்லை. அதனால்தான் எழுத்தாளன் குமாஸ்தா  வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. உங்களைப் போல் இருப்பவர்கள் ஊருக்கு ஒரு வாசக சாலை வைத்துப் புத்தகம் வாங்கினால் கூடப் போதுமே!” – வெறி -1954


எங்க காலத்திலே நாங்கள் கொடுத்துப் பழகினோம்.இந்தக்காலதிலே திருட்டுப் பசங்க எடுத்துப் பழகிட்டாங்க .இடையிலே இருக்கிறவன் திட்டத்திலே மட்டம் போட்டுராமல் பார்த்துக்கோங்கோ.” – சாதி இரண்டொழிய.. 1982


ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கின்றானோ  அதே உணர்வை, படிக்கும் போது வாசகரும் பெறுவதே அந்தப்  படைப்பின் வெற்றி, அத்தகு படைப்பாளி  அகிலன்.
அதானால் தான் பாமரர் முதல் பயின்றோர் வரை அவரது எழுத்தைத்  தொடர்ந்து வாசித்து,நேசித்து வருகின்றனர் .
200 சிறுகதைகளை எழுயுள்ளார் அகிலன். அவை  அனைத்தும் ஒன்றாக சமீபத்தில்  ‘அகிலன் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் கால வரிசைப்படி இரு தொகுதிகளாக அகிலன் கண்ணனால்    தொகுக்கப்பட்டுள்ளது .
அகிலனின் சிறுகதைகள் அடிமை இந்தியா முதல் இன்று  வரை உள்ள 50  ஆண்டு கால தமிழக வரலாற்றின் மனசாட்சியாகவே படைக்கப்பட்டுள்ளன.
புதுத் தமிழ் இலக்கியத்தில் முக்கிய பங்கு அகிலனின் படைப்புகளுக்கு உண்டு.
இவரது சிறுகதைகள், தனி மனித உணர்வுகள் மூலம் சமூகப்  பிரச்சினைகளை அச்சமின்றி  தோலுரித்துக்  காட்டுகின்றன.
வீடும் நாடும் ஒன்றை ஒன்று எப்படிப்  பாதிக்கின்றன என்பதைத்    துல்லியமாகப்  பேசும் சிறுகதைகள்- அகிலனது சிறுகதைகள்.
குடும்பம்,உறவு,மனிதம்,காதல்,பாசம்,காமம்,வெறுப்பு,கடமை ,பொறுப்பு,உழைப்பு,சாதி,ஏழ்மை,அரசியல்,பெண்ணியம்,ஊழல்,நேர்மை,பண்பு,பொருளாதாரம் என அனைத்து விஷயங்களையும் படம்பிடித்துக்  காட்டுகின்றன அகிலனின் சிறுகதைகள்.
பொதுவாக இலக்கியவாதிகள் ஒரு குறிப்பிட்ட வகைப்  படைப்புகளிலேயே மிளிருவார்கள்.ஆனால் அகிலன் பன்முகத் தன்மைகொண்டவர் என்பதை  அவரது நாவல்கள் மூலம் அறியலாம்.
அகிலனின் நாவல்களை, சரித்திர நாவல்கள் , சமூக நாவல்கள் எனப்  பிரித்தாலும்,  அவரது சரித்திர நாவல்களிலும் தற்கால சமூகக்  கருத்துக்கள் பிரதிபலிப்பதை வாசகர்களால் உணர முடியும்.
இதுவே அவரது நாவல்களின் வெற்றியும் கூட.
  • இன்றும் பெரும் வாசகர்  கூட்டத்தைக்  கவரும் அகிலனின், ‘ வேங்கையின் மைந்தன் ‘ , ராஜேந்திர சோழனின் ஆட்சிக்  காலத்தை அடிப்படையாகக்  கொண்ட சரித்திர நாவல் 21 பதிப்புகளைக்  கண்டுள்ளது.
இதன் கதை மாந்தர்களான மாமன்னர் ராஜேந்திரர், வந்தியத்தேவர்,அருள்மொழி,இளங்கோ,ரோகிணி ,வீரமல்லன்,  உயிர் ஓவியமாய் படிப்பவரை வியாபிக்கின்றனர் . சரித்திர நிகழ்வுகளோடு, தமிழர்களின் தற்கால அரசியல் பிரச்சினைகளையும் இந்நாவலில் அகிலன் பிரதிபலிக்கத்  தவறவில்லை.


தமிழ் நாட்டில் மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை மட்டும் இருந்திருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிருப்போம் , ஒற்றுமை கெட்ட குலம்  தமிழ்க் குலம்.’

“ஈழத்தில் உள்ள தமிழ் முடியை நாம் வென்று வராவிட்டால் இத்தனை பெரிய சோழ சாம்ராஜ்யத்தை நாம் கட்டி ஆள்வதில் பொருளே இல்லை மதுராந்தகரே! இந்தச் சோழ மண்டலத்தை மேலைச் சளுக்கரும் பாண்டிய சேரரும் ஒன்றுகூடி அழித்தாலும் அழிதுக்கொள்ளட்டும், நம்முடைய முதல் போர்  தமிழன் ஒருவனுடைய மணி முடிக்காக!


எனும் வரிகள் மூலம் தமிழர்களின் வரலாற்றுச் சிக்கல்களையும், மனப்பான்மையையும்  இந் நாவலில் வெளிப்படையாகப் பேசுகிறார் அகிலன்.
தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல்லான வேங்கையின் மைந்தன் 1963  இல் மத்திய அரசின் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
இந்நாவல் சிவாஜி கணேசன் குழுவினரால் நாடகமாக்கப்பட்டு நடிக்கப் பெற்றது .
அகில இந்திய வானொலியிலும்  நாடகமாக்கப்பட்டது.
  • பாண்டிய சாம்ராஜ்யத்தைக்  கதைக் களமாகக் கொண்ட அகிலனின் ‘கயல்விழி’ எனும் சரித்திரப் புதினம்,  1964 -65    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த தமிழ் நாவல் பரிசைப் பெற்றது.  “வீட்டுக்கு வீடு தலைவர்கள் வேண்டும். நாட்டின் ஒவ்வொரு சிறிய , பெரிய துறைகளிலும் தலைவர்கள் வேண்டும்,அரசு,குடும்பம்,தொழில்,கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறைத் தலைவர்கள் தோன்றமாட்டார்களா   என்று கனவு கண்டு வருபவன் நான்… அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்கக் கூடும் ‘ எனும் அகிலனின் கயல்விழி பற்றிய கருத்து நாவலாசிரியரின் சமூக அக்கறையைப்  படம்பிடிக்கிறது.
தலைமைப்  பண்பு எது? எனும் கேள்விக்கு

‘ நம்முடைய மக்களுக்கு முன்பாகவே நாம் நமது உரிமையை அழித்துக்கொண்டு, மானத்தை அழித்துக்கொண்டு, பெயரை அழித்துக்கொண்டு வாழ்வதை விட அழிந்துவிடுவது மேல்!”
‘தம்பி! நாடு என்பது வெறும் மண் பரப்பல்ல , நீ இந்த நாட்டின் தலைவன்,குடிமக்கள் உன் குழந்தைகள். அவர்களைப் போரின் அழிவிலிருந்து காக்க ஏதும் வழி தெரிந்தாலும் அதில் செல்லத் தயங்கக் கூடாது. போரைத் தவிர்க்க முடியுமானால் தவிர்க்க வேண்டும்
எனும் அகிலனின் வரிகளில் பதில் கிடைக்கின்றன.
  • ‘ பாகிஸ்தானம் தன்னை ஒரு சமயச் சார்புள்ள நாடு ‘ என்று சொல்லிப் போர் முரசு கொட்டியது.ஆனால் நமது நாட்டின் சார்பில் போர்க்களத்தில் குதித்தவர்களோ  பல்வேறு சமயங்கள் , இனங்கள்,மொழிப் பகுதிகளைச் சார்ந்தவர்கள். அவர்கள் போர்க்களங்களில் காட்டியுள்ள வீர சாகசங்கள் கற்பனைகளையும் மிஞ்சக் கூடியவை . பழம் பெரும் வரலாறுகளும் காணாத  ஒற்றுமையோடு அவர்கள் தீரச் செயல்கள் புரிந்திருக்கிறார்கள்.
இந்தச் சாதனைகளின்  அடித்தளம் எது?
செப்பும் மொழி பதினெட்டுடையோரைச் சிந்தனை ஒன்றோடு திரண்டு நிற்கச் செய்த மூல சக்தி எது ?
இந்து,முஸ்லிம்,சீக்கியர்,கிருஸ்துவர் ஆகியோர் ஒரே கொடியின் கீழ் தேசிய எழுச்சி பெற்று சாதனைகள் புரிகின்றனர் என்றால் அதற்கான விழிப்பு எப்போது இங்கு முதன் முதலில் ஏற்பட்டது? இந்தக் கேள்விகளுக்கு நான் விடை தேட முயன்றதன் விளைவே இந்த ‘வெற்றித் திருநகரா ‘க உருவெடுத்திருக்கிறது எனக் கூறும் ஆசிரியர் அகிலன், தனது நாவலில் மொழி, இன, சமய வேறுபாடுகளைக் கடந்த தேசிய உணர்வு ஒரு நாட்டிற்க்கு எவ்வளவு  அவசியம் என்பதை அழகாய்,ஆழமாய்  விளக்குகிறார். ( வெற்றித்திருநகர் 1965 )

தென்னாட்டில் ஒரு தெற்குப் பாகிஸ்தானம் ஏற்படாமல் இந்த நாட்டின் பண்பாடு,கலை,இலக்கியம் இவற்றை காத்த விஜய நகரத்திற்கு வெற்றித்திரு நகர் நாவல் மூலம் பெருமை சேர்க்கிறார்.
நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.உயிருள்ள வரையில் நம்பிக்கையும் அதோடு ஒன்றியிருக்க வேண்டும்.நம்பிக்கை மட்டும் இருந்தால் நாம் இழந்த அனைத்தையுமே மீட்டுவிடலாம்” எனக்கூறும் வெற்றித் திருநகர் ,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைத் தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் கதை . தேசிசிய ஒற்றுமை, நம்பிக்கையின் தேவை, என்கிற இந்நாவலின்  செய்தியால் இன்றும் அகிலன் நமக்கு வெளிச்சப்பாதை காட்டுகிறார்.
அகிலனின் சமூக நாவல்கள் தனித் தன்மைகொண்டவை.
‘காலம் மாறும் ; ஆனாலும் இந்தக் காலத்தின் கோலத்தை நான் எவ்விதமாகக்  கண்டேனோ அவ்விதமாகச் சித்தரித்து வைப்பது என் கடமையென்று தோன்றியது. அதைச் செய்திருக்கிறேன்.’ என அடக்கமாகக் கூறும் அகிலனின் எழுத்துக்கள் ஆரவாரமின்றி மௌனப்புரட்சி செய்பவை.
தமிழுக்குப்  பெருமை சேர்த்த –  1975 இல் தமிழுக்கு  முதல் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்த அவரது ‘ சித்திரப்பாவை’, பெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு. ‘சித்திரப்பாவை’   பற்றி அகிலன் ‘ இன்றைய இலக்கியம், நாளைய வழி காட்டியாக அமையக்கூடியது. இந் நாவலில் ‘ஆனந்தி’ பற்றிய என் கருத்தை எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது இல்லை.சிந்தித்துப் பார்த்தால் போதும்.
நாளைக்கு இந்தச் சமூகத்தில் ‘மாணிக்க’ ங்கள் போன்ற போலிகள் ‘அண்ணாமலை’களுக்கும் ‘ஆனந்தி’களுக்கும் துரோகம் செய்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட இந்நாவல் சிறிதளவாவது தூண்டுதலாக இருக்க வேண்டுமென்பது என் நோக்கம்’ என்கிறார். அவரது இம்மேம்பட்ட எண்ணமே ‘சித்திரப்பாவை’யின்  உயிர் நாடியாகிறது .
ஆங்கிலம் மற்றும் பெரும்பாலான இந்திய மொழிகளில் புத்தகமாகவும், வானொலி,தொலைக்கட்சிகளில் தொடராகவும் வெளி வந்துள்ள இந் நாவல்,
பல்கலைக்கழகங்களிலும், ஐ .ஏ .எஸ் தேர்வுக்கும் பாட நூலாக உள்ளது.
இன் நாவலின் முடிவு பரபரப்பாகப்  பேசப்பட்டு, நவீன தமிழ் இலக்கிய உலகில் பெருமளவு விமர்சிக்கப்பெற்றது.
அகிலனின் ‘பாவை விளக்கு‘ அவரது சுய வாழ்வின் பிரதிபலிப்பாகவே   பார்க்கப்படுகிறது. ஒரு இலக்கிய வாதியின் போராட்ட  வாழ்வினை மிக இயல்பாய்க்  கூறிச் செல்லும் இந் நாவல், திரைப்படமாக்கப்பட்டு சிவாஜி கணேசனால் நடிக்கப்பட்டது. ” உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டம், தீயவன் (villan ) உதவி இன்றியே ஒரு பெரிய புதினம் மனத்தைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்கு பாவை விளக்கு நல்தோர் எடுத்துக்காட்டு, என்று பேராசிரியர் அ.ச.ஞா. முத்திரை குத்துகிறார் இந் நாவலுக்கு.
விடுதலைக்குப் பின் ‘ வாழத் தெரிந்த’ மனிதர்களின் மன வளம் எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது ? ‘ எனக் கேள்வி கேட்கும் ‘புது வெள்ளம்‘ அகிலனின் சமூகக் கவலையை , சுகந்திர இந்தியாவின் எதிர்காலத்தை,நாடு எதிர் கொள்ள வேண்டிய உட் போராட்டங்களை,சமுதாய சீர்கேடுகளைப்  படம் பிடிக்கின்றது.
விவசாய நாடு , தொழில் மயமாகையில் – நகர மயமாகையில் மனிதர்களின் பண்பாட்டுப் பார்வை சிதிலமடைவதை உணர்வுத்துடிப்புடன் இந் நாவலில்   படைத்துள்ளார் அகிலன்.
இந்திய தேசிய ராணுவப் பின்னணியும்,திருச்சியும் வாசு,கனகம்,புஷ்ப்பாவும், ‘நெஞ்சினலைகளாக ‘ ப் படைக்கப் பெற்றது .
கலப்பு மணப் பிரச்சினையை ‘வாழ்வு எங்கே?’ நாவல் அலசுகிறது.
இந்திய வாழ்வில் பணம் பெரும் முக்கியத்துவமும்,பொருள் வேட்டைத் தேடலில், தனி மனித குணச்  சிதைவையும் ‘பொன்மலர்’ நாவல் சுவையான அழகுடன் கூறுகிறது.
‘ எங்கேபோகிறோம்? ‘ நாவல் காந்திய யதார்த்தத்தின் வெளிப்பாடாய் அமைந்தது. ‘எரிமலை’ சிறுகதை வெளிவந்து பரபரப்பான விமர்சனங்களுக்கு உட்பட்டபோது , அந்த ஒரு சிறுகதைக்குள் சொல்லிவிட முடியாத ‘ வழிகாட்டியே வழுக்கி விழுந்தால் பிறகு நாடு எங்கே போகும் ?’ என்கிற சமகால அரசியல் தலைமைப்  போக்கை கண்டு சீறி எழுந்த தார்மீகக் கோபம் ‘எங்கே போகிறோம்?’ நாவலாய் ஒளிர்ந்தது.
இன்றைய இந்தியாவின் தலைமைப்  பண்புகளின் போக்கை 1972 இல்   தொலைநோக்குப் பார்வையில் உணர்ந்து குடியாட்சிக் கோட்பாடான ‘ மக்கள் எவ்வழி அவ்வழி அரசு ‘ என்பதை உணராத மக்கள் மீது முடியாட்சித் தத்துவமான  ”அரசு எவ்வழி அவ்வழி மக்கள்” என்கிற அவலத்தை விதைக்க முற்ப்பட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் போக்குகளை தோலுரித்துக் காட்டிய நாவல் எங்கேபோகிறோம்.
வானமா பூமியா ?’  தொடங்கியது. தனது உடல் நிலை காரணமாக இறுதி அத்யாயத்தை அவரால் நிறைவு செய்ய இயலாமல் போனது. அகிலனின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த  கி.வா.ஜ வின் உதவியுடன் , அகிலன் கண்ணன்  இந் நாவலின் இறுதி அத்யாயங்களை நிறைவு செய்தார்.  நகரத்தின் குடியிருப்புப் பிரச்சினைகளை மையப் படுத்திய இந்த நாவல் காந்திய – தீவிரவாதப்  போக்குகளைப் பின்புலமாகப் பேசியது. சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும் வந்தது.

காமராஜர், சி.எஸ், ஜீவா, மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், கர்பூரி தாகூர்,எம்.ஜி.ஆர்,இந்திரா காந்தி ,கே.முத்தையா  போன்ற தலைவர்களுடனான அகிலனின் நட்பும்  இங்கு குறிப்பிடப் படவேண்டியது அவசியம்.அகிலனின் கடுமையான அரசியல் விமர்சனங்களைப்  பெரும்பாலான தலைவர்கள் பொறுப்போடும், ஆரோக்கியமான மனப்பக்குவத்தோடும் ஏற்றுக்கொண்டனர்.

அகிலனின் நட்பு மு.வ ,க.ண.முத்தையா,கல்கி,தகழி சிவசங்கரன் பிள்ளை,சிவராம் கரந்த் என பல தளங்களில் விரிந்திருந்தது.  சாகித்ய அகாதமி தேர்வு குழு,தமிழ்நாடு அரசு தேர்வுக்குழுக்கள்,போன்ற அமைப்புகளில் நடுவராக இருந்து மற்ற படைப்பாளிகளை ,படைப்புக்களை தேர்வு செய்து அடையாளம் காட்டிய பெருமையும் இவருக்கு உண்டு.
எழுத்தாளர் சங்களில் பொறுப்புகள் வகித்து பாரதி போன்ற நமது தேசிய படைப்பாளிகளை அடுத்த தலைமுறைக்கு அழைத்துச் சென்றார். தமிழ் எழுத்தாளர்  கூட்டுறவு சங்கப் பணி மூலம் புதிய  படைப்பாளிகளின் நூல்கள் வெளி வரவும், உதவினார்.
காந்தியத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அகிலன், மூன்று முறைஅரசு அழைப்பினை  ஏற்று  ரஷ்யா சென்றார், தமது பயண அனுபவங்களை ‘நான் கண்ட ரஷ்யா‘ , ‘ சோவியத்  நாட்டில் ‘ என்ற புத்தகங்களில்  பதிவு செய்தார்.
அகிலனின் மலேசிய,சிங்கப்பூர், பயணம் ‘பால்மரக்காட்டினிலே‘ நாவலாக உருப்பெற்றபோது  போது , கடல் கடந்த தமிழர்களின் போராட்ட வழக்கை நமக்குப்  புரியத்தொடங்கியது.
இலங்கைக்கும் தமிழ் இலக்கிய விருந்தினராகப் பயணித்த அகிலன், பீகார்,ஒரிசா,வங்க தேசம்,கர்நாடகம்,ஆந்திர மற்றும் கேரளம் போன்ற அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் பயணித்து, தமது அனுபவங்களையும், அரசியல்,சமுதாய  போக்குகளையும் தமது படைப்புகளின் மூலம் பகிர்ந்துள்ளார்.
அகிலனின் எழுத்துக்களில்  காந்திய,வள்ளுவம்,தி.ரு.வி. க மற்றும் பாரதியின் தாக்கங்கள் மேலோங்கி இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
அகிலனின் பன்முகத்தன்மை, அவரது கட்டுரைகள் மூலமும் வெளிப்படுகின்றன.
‘ நூற்றுக்கு தொன்னுற்றுஒன்பது பேருக்கு உள்ள தொல்லை இங்கு பொருளாராதாரத் தொல்லைதான்’ எனும் வாழ்வியல் உண்மையை  மைய்யப்படுத்தும்  அகிலனின் “வெற்றியின் ரகசியங்கள்” அதிலிருந்து விடுபட்டு வெற்றிபெறும் வழிகளையும் உதாரணத்தோடு உரைக்கிறது.

நாணயத்தில் நம்பிக்கை கொண்ட பெரும்கூட்டமான மக்களுக்கு நடு  நிலையில் உள்ள அறிவாளிகள் செய்ய வேண்டிய முதல் பணி –
நாணயமுள்ளவர்  யார்?
நாணயமிலாதவர் யார்?
என்று பிரித்தறியும் சிந்தனை வளரத் துணை செய்வதுதான்.” எனும் கருத்தின்   அடிப்படையில் எழுதப்பட்டது  ‘நாடு நாம் தலைவர்கள்’ நூலும்  ‘ எழுத்தும் வாழ்க்கையும்’ ,’ புதிய விழிப்பு‘,’கதைக்கலை‘ ,’ சோவித் நாட்டில்‘ ,’நான் கண்ட ரஷ்யா’,’மலேசிய சிங்கப்பூரில்‘ ஆகிய அனைத்துப்  படைப்புகளும் அகிலனை மிகச்சிறந்த கட்டுரையாளராய்ப்  பிரதிபலிக்கின்றன.

அகிலனின் படைப்பாற்றல் சிறுவர் இலக்கியம்,மொழிபெயர்ப்பு எனவும்  பல கோணங்களில் வெளிப்பட்டன. இவரது, தங்க நகரம், ‘ கண்ணான  கண்ணன்‘,’நல்ல பையன்‘ ஆகிய சிறுவர் கதைகள், குழந்தைகளையும் சிந்திக்க வைக்க கூடியதாய்  அமைகின்றன.
ஆஸ்கார் வயில்டு , மற்றும் மாப்பசான்டின்,தாகூரின் படைப்புகளையும் தமிழில்மொழிபெயர்த்துள்ளார் அகிலன்.
அகிலனின் மேடைப்பேச்சுகளும் மிகவும் வலிமையானவை ,வேலூரில்  அவரதுரூசா  மாநாட்டு உரை தற்போது குறுந்தகடாய் வெளிவந்து,பெரும் வரவேற்ப்பைப் பெற்று, சிந்தனைத் தூண்டலையும் நிகழ்த்தி வருகிறது .
அகிலனின் இத்தகு பன்முகத் திறனே அவரது படைப்புகள் லண்டன்,மலேசிய,சிங்கப்பூர், பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை,முதுகலை முதல்,இந்திய ஆட்சிப் பணி வரை மாணவர்களுக்குப்  பாடநூலாகவும்  விளங்கச் செய்கிறது. 1974 -ம் வருடம் மதுரைப் பல்கலைக்கழகம் இவரது நூல்களையும் -படைப்புகளையும் ஆராய நான்கு நாள் கருத்தரங்கு  நடத்தியது.
அகிலன், “வாசகர்களுக்கு எது பிடிக்குமோ அதை எழுதுவது எழுத்துப்பணியாகாது .எது பிடிக்கவேண்டுமென்று ஆசிரியர் நினைக்கின்றாரோ,எதை வெளியிட வேண்டுமென்று அவர் உள்ளம் துடிக்கிறதோ அதை வாசகர்களுக்கு பிடிக்கும் முறையில் எழுத வேண்டும் ” என முழுமையாக நம்பினார். இதன் காரணமாகவே அவர் தனது எழுத்தை ,கொள்கைகளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை- தளர்த்தவில்லை, தனது கருத்துக்களை சிறுபத்திரிக்கை  முதல் மிகப்  பிரபலமான பத்திரிகைகள் வரை வேறுபாடின்றி ,போலித்தன்மையில்லாமல்  பதிவு செய்தார்.


எளிமை,உண்மை,மனித நேசம், கலைத்தன்மை,நேர்மை,அஞ்சாமை ,என்கிற சத்திய ஆளுமைப் பாதையில் தானும் வாழ்ந்து கலையழகுக் கொள்கைப் பிடிப்பும் நிறைந்த தன் படைப்புகளின் வழி – தமிழ் வாசகர்களையும் மேம்படவைத்த   படைப்பாளி அகிலன்.


(c) Dhagam

Image description